தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
தேசிய மனித உரிமை அமைக்களின் கூட்டமைப்பு (NCHRO) கண்டன அறிக்கை
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த மக்களைத் தமிழகக் காவல்துறை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் எதிர்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனை தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) வன்மையாகக் கண்டிக்கின்றது.
இதுவரைக்கும் குறைந்தபட்சம் 12 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 65 பேர்களுக்கும் மேற்பட்டோர் கடும் குண்டுக் காயங்களுடன் மருத்துவமனைகளில் உள்ளனர். பலர் காணாமல் போயிருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர்கள் சொல்கின்றனர். இராணுவத்தில் எதிரிகளைத் துல்லியமாகக் குறி வைத்துத் தாக்கிக் கொல்லப் பயன்படுத்தப்படும் ‘ஸ்னிப்பர்’ துப்பாக்கிகளைப் பயன்படுத்திச் சுட்டுள்ளனர். இம்மாதிரித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும்போது கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கை விதிகள் மற்றும் நடைமுறைகள் (Tamilnadu Police Standing Order and the Police Training Manual) எதுவும் கடைபிடிக்கப்படாமல் இது நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. கொல்லப்பட்டவர்கலில் பெரும்பாலோருக்கு மார்பு அல்லது அதற்கும் மேலாகக் குண்டு பாய்ந்துள்ளது. பதினேழு வயதுப் பள்ளி மாணவி ஒருவர் வாயில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைத்த பின்னரே தாங்கள் சுடத் தொடங்கியதாக இப்போது காவல்துறை சொல்லுகிறது. ஆனால் மூன்றடுக்குப் பாதுகாப்பில் இருந்த ஆட்சியர் அலுவலகத்துக்குள் எப்படி ஊர்வலத்தில் வந்த சிலர் கையில் எரிபொருள்களுடன் நுழைந்திருக்க முடியும் என்கிற கேள்விக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.
கடும் சுற்றுச் சூழல் தீங்குகளை விளைவிக்கும் இந்த ‘ஸ்டெர்லைட்’ ஆலை ஆண்டுதோறும் 400,000 டன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. இது அனில் அகர்வாலின் ‘வேதாந்தா’ எனும் கார்பொரேட் நிறுவனத்தின் துணை நிறுவனம். தூத்துக்குடி ‘சிப்காட்’டில் இயங்கும் இந்த நிறுவனம் இப்போது தனது திறனை இரண்டு மடங்காக உயர்த்தத் தொடங்கியுள்ளது. திட்டமிட்ட விரிவாக்கம் நடந்து முடிந்தால் இனி அது ஆண்டுக்கு 800,000 லட்சம் டன் வரை தாமிர உற்பத்தியைச் செய்ய முடியும்.
தற்போது மார்ச் 27 முதல் அந்நிறுவனம் மூடிக் கிடக்கிறது. தமிழ்நாடு சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி வேதாந்தாவின் உரிமத் தொடர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. வேதாந்தா அதற்கெதிராக நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இப்படி அது மூடிக் கிடப்பது இது முதல்முறை அல்ல. தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் இருந்த ஒரு வழக்கின் விளைவாக 2013 ம் ஆண்டிலும் அது பல வாரங்கள் மூடிக் கிடந்தது.
இந்த ஆலைக் கழிவுகள் ஏற்பபடுத்தும் சுற்றுச் சூழல் அழிவுகள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஆகியவற்றின் காரணமாக இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரி நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். இப்போது நடக்கும் போராட்டம் கடந்த நூறு நாட்களாக நடந்து கொண்டுள்ளது. நூறாவது நாளான மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். அதற்கான அனுமதி அளிக்கபடாததோடு 144 தடை ஆணையும் விதிக்கப்பட்டது. எனினும் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் செல்வது எனவும், காவல்துறையினர் தடுக்கும் போது அமர்ந்து கைதாவது எனவும் மக்கள் முடிவு செய்தனர்.
12 பேர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது உட்பட மே 22 அன்று நடந்த அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறை அந்தச் சூழலைத் தவறாகக் கையாண்டதன் விளைவு மட்டுமே என நாங்கள் கருதவில்லை. இது முன்னதாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே இவ்வாறான கார்பொரேட் முயற்சிகளை எதிர்க்கும் மக்களுக்கு, அவர்களின் போராட்டங்கள் இனி இப்படித்தான் எதிர்கொள்ளப்படும் என ஒரு பாடம் கற்பிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தான் இது. கார்பொரேட்டுகளுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள மோடி அரசு, தமிழ்நாடு அரசுக்குத் தேவையானால், மத்திய படைகளை அனுப்பி ‘உதவி’ செய்யத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது.
எங்கள் கோரிக்கைகள்
இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கப் பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நீதி விசாரணை ஆணையம் ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என என்.சி.ஹெச்.ஆர்.ஓ கோருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஆணையத்தை நாங்கள் நம்பவில்லை.
அவ்வாறு நியமிக்கப்படும் ஆணையம் (i) அன்று சுடத் தொடங்குவதற்கு முன் உரிய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டனவா, இது தொடர்பான காவல்துறை விதிகள் கடை பிடிக்கப்பட்டுள்ளனவா? (ii) கொல்லப்பட்டவர்கள் பலருக்கும் ஏன் மார்பு மற்றும் மார்புக்கு மேல் குண்டுக் காயங்கள் பட்டுள்ளன? (iii) கூட்டத்தை நோக்கிச் சுடும்போது எவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பலர் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்? என்கிற ஐயங்களைத் தெளிவு படுத்த வேண்டும்.
உரிய விதிகளைக் கடை பிடிக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தால் அந்தக் காவல்துறையினர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்.
மாவட்ட காவல்துறைத் தலைவர் மற்றும் ஆட்சியரை இப்போது அரசு இடம் மாற்றியுள்ளது. அவர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது துறைசார் விசாரணை தொடங்க வேண்டும்.
அப்பாவி மக்கள் பலர் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளதை தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்குப் பொருத்தமான, நிரந்தரமான அரசுப் பணி அளிக்க வேண்டும்.
குண்டடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பத்து இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவமனையில் அவர்களுக்காகும் மொத்தச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தை உடனடியாகவும் நிரந்தரமாகவும் மூட வேண்டும்.
இப்படிக்கு
பேரா. அ. மார்க்ஸ்
தேசிய தலைவர்,
தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு
செல்: 94441 20582
மே 24, 2018
புதுடில்லி
Leave a Reply