மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.05.2018) விடுத்துள்ள அறிக்கை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போலீசார் திட்டமிட்டுத் தூப்பாக்கிச் சூடு நடத்தி 11 பேர் பலியான சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் உயர்மட்ட குழுவினை அனுப்பி விசாரிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
தூத்துக்குடியில் கடந்த 1994-ல் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தாமிரம் தயாரிக்கப்படுகிறது. இதனால், காற்று, நீர், நிலம் மாசடைந்து அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர், ஏராளமானவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள 21 கிராம மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்துப் போராடி வருகின்றனர்.
நேற்றைய தினம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரையில் அறிவிக்கப்பட்ட தகவலின்படி 11 பேர் பலியாகி உள்ளனர். 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 20 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
போலீசார் கூட்டத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர கையாள வேண்டிய வழிமுறைகள் எதையும் பின்பாற்றாமல் எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலியான 11 பேரில் 8 பேர் இப்போராட்டத்தைக் கடந்த 100 நாட்களாக வழிநடத்திய தலைவர்கள் ஆவர். போராட்ட தலைவர்களைக் குறிப்பார்த்து சுட்டது என்பது போலீசார் முன்னரே திட்டமிட்டு அரங்கேற்றிய அடக்குமுறை என்பதற்குச் சான்றாகும்.
மேலும், போலீசார் மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்த மக்கள் மீதும் தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்த பின்பு மாவட்ட கண்காணிப்பாளர் சென்ற காரை வழிமறித்து நியாயம் கேட்ட மக்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டு 2 பேரைக் கொன்றுள்ளனர்.
போராடிய மக்கள் மீது திட்டமிட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட உயரதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதில் தலையிட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவினை அமைத்து தூத்துக்குடி பகுதிக்கு உடனே அனுப்பி வைத்து உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Leave a Reply