காலாப்பட்டு சாசன் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது: ஆளுநரிடம் சமூக அமைப்புகள் மனு!

புதுச்சேரி காலாப்பட்டு ஸ்ரெட்ஸ் சாசன் தொழிற்சாலை உற்பத்தியை அதிகரிக்கும் விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களை நேரில் சந்தித்து சமூக அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொறுப்பாளர் ந.தமிழ்மாறன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், இயற்கை மற்றும் கலாச்சாரப் புரட்சி இயக்கத் தலைவர் பிராங்குளின் பிரான்சுவா ஆகியோர் 09.05.2018 அன்று மாலை ராஜ் நிவாசில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:

1986 ஆண்டு முதல் சாசன் தொழிற்சாலை நிலத்தடி நீரை எடுத்து மருத்துக்கான வேதிப் பொருள் தயாரிப்பதால் காலாப்பட்டு பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மாசடைந்து மக்கள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள 2500 ஏக்கர் நிலத்தில் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது.

ஆலையின் கழிவு நீரைக் குழாய் மூலம் கடலில் கலந்ததால் கடல் வளம் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழிந்தது. மக்களின் கடும் எதிர்ப்பினால் இந்த முறை கைவிடப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுக் கலந்தப் புகையால் காற்று மாசடைந்து மக்கள் பல்வேறு சுவாச நோய்களுக்கு ஆட்பட்டு துன்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொழிற்சாலையின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விரிவாக்கம் செய்ய அனுமதி அளிப்பது குறித்து சென்ற 8ம் தேதியன்று புதுச்சேரி அரசின் மாசுக் கட்டுப்பாட்டுக் குழு சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் காலாப்பட்டில் நடைபெற இருந்தது. தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் கூட்டம் ரத்து செய்ய்யப்பட்டது.

தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய மேலும் கூடுதலாக நிலத்தடி நீர் எடுக்கவும் தொழிற்சாலை நிர்வாகம் தனது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் கூறியிருந்தது. ஏற்கனவே, நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து உள்ளதால், மேலும் நிலத்தடி நீரை எடுக்க அனுமதித்தால் ஒட்டுமொத்த புதுச்சேரியின் நீர் ஆதாரமும் கெடும்.

1988ம் ஆண்டு கடற்கரையில் இருந்து 6 கி,மீ. தூரத்திற்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் எந்தத் தொழிற்சாலைக்கும் அனுமதி இல்லை என புதுச்சேரி அரசு அரசாணைப் பிறப்பித்துள்ளது. மேலும், 1990ம் ஆண்டு இந்த அரசாணை தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும் பொருந்தும் எனவும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரி அரசு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த முயன்றதே சட்டவிரோதமானது.

எனவே, சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவித்து நீர், காற்று, நிலம், கடல் வளத்தைச் சீரழித்து விவசாயிகள், மீனவர்கள் என காலாப்பட்டு பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சாஷன் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய அனுமதி அளிக்கக் கூடாது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள் ‘இதுகுறித்து விரிவாகப் பல்வேறு அம்சங்களை ஆய்வுச் செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். எக்காரணம் கொண்டும் பொதுமக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்க மாட்டோம்’ என்று உறுதிக் கூறினார்.

இம்மனுவில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செலவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் ஶ்ரீதர், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீர.மோகன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பெ.சந்திரசேகரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்புத் தலைவர் சீனு.தமிழ்மணி, செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சாமிநாதன், புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ.சடகோபன், ஆம் ஆத்மி கட்சி இளைஞரணித் தலைவர் ஆலடி கணேசன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம் தலைவர் பெ.பராங்குசம், தனித்தமிழ்க் கழகச் செயலாளர் சீனு.அரிமாப்பாண்டியன், பெரியார் சிந்தையாளர்கள் இயக்கத் தலைவர் தீனா, புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவை தமிழ்நெஞ்சன், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் கோ.மு.தமிழ்ச்செல்வன், கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவைத் தலைவர் சிவ.இளங்கோ, திமுக மாணவர் அணிப் பொறுப்பாளர் இள.கோவலன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ச.சக்தியவேல், புதுச்சேரி யூனியன் பிரதேச தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் செல்வகுமார், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத் தலைவர் இரா.சுகுமாரன், இந்திய மக்கள் சக்திப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் அர.அரிகிருஷ்ணன், மக்கள் நற்பணி இயக்கத் தலைவர் வி.மாறன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*