மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.05.2018) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி காலாப்பட்டு சாசன் தொழிற்சாலைக்கு எதிராக கருத்துக் கூற வந்த பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
1986 ஆண்டு முதல் சாசன் தொழிற்சாலை நிலத்தடி நீரை எடுத்து மருத்துப் பொருள் தயாரிப்பதால் காலாப்பட்டு பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மாசடைந்து மக்கள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர். அப்பகுதியில் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது.
ஆலையின் கழிவு நீரை குழாய் மூலம் கடலில் கலந்ததால் கடல் வளம் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழிந்தது. மக்களின் கடும் எதிர்ப்பினால் இந்த முறை கைவிடப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுக் கலந்த புகையால் காற்று மாசடைந்து மக்கள் பல்வேறு சுவாச நோய்களுக்கு ஆட்பட்டு துன்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாசன் தொழிற்சாலை தனது உற்பத்தியை அதிகரிக்க விரிவாக்கம் செய்ய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. இதுகுறித்து நேற்றைய தினம் புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு சார்பில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க இருந்தது.
தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு சின்ன காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கணபதிசெட்டிக்குளம் பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவில்லை.
ஆளும் காங்கிரஸ் அரசின் தூண்டுதலின் பேரில் சிலர் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி தொழிற்சாலைக்கு ஆதரவாக பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். காவல்துறை மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் காயமடைந்தனர்.
போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் பொதுமக்களைக் கலைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்துப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற எதிர்ப்பு வரும் என்று முன்கூட்டியே அறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க காவல்துறையினர் தவறிவிட்டனர். இந்தக் கலவரம் நடக்க காவல்துறையின் உயரதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணமாகும்.
மேலும், காவல்துறையினர் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மீது வழக்குப் பதிவு செய்து ஏராளமானவர்களைக் கைது செய்து வருகின்றனர். இதனால், மக்கள் ஊர்களைவிட்டு வெளியேறிதால் அப்பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
எனவே, காவல்துறை தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மக்களைக் கைது செய்வதைக் கைவிட்டு காலாப்பட்டு பகுதியில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இதுகுறித்து ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் மனு அனுப்ப உள்ளோம்.
Leave a Reply