நீட் தேர்வில் விலக்குப் பெற முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டில்லி சென்று வலியுறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.02.2018) விடுத்துள்ள அறிக்கை:

நீட் தேர்வில் இருந்து விலக்குப் அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் பெற முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டில்லி சென்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள நீட் தேர்வினால் புதுச்சேரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வினால் ஏழை மாணவர்கள் மருத்துவராகும் கனவு கலைந்துப் போயுள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் இரு சட்ட முன்வரைவுகளை ஒப்புதலுக்காக மத்திய அரசுக்குப் புதுச்சேரி அரசு அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசுப் பல ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஒப்புதல் அளிக்கவில்லை. முதல்வர் நாராயணசாமி இதுகுறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்காததால் புதுச்சேரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 3 ஆயிரம் பேர், மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ஆயிரம் பேர் என மொத்தம் 15 ஆயிரம் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதுகின்றனர். நீட் தேர்வில் முழுக்க மத்திய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சிப் பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

நீட் தேர்வு இந்த ஆண்டு மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார். ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்று நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 5-ம் வகுப்பு வரையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலும், 6-ம் வகுப்பு முதல் மாநிலப் பாடத்திட்டத்திலும் கல்விப் பயிற்றுவிக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இது புதுச்சேரி மாணவர்கள் இடையே பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

எனவே, முதல்வர் நாராயணசாமி உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டில்லி சென்று மத்திய அரசை அணுகி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*